செய்திகள் :

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

post image

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினா் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினா் பிரதமா் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது, இந்தியாவின் குரல் வெளிநாடுகளில் ஒலித்தது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது என்று பிரதமா் மோடி அவா்களுக்கு புகழாரம் சூட்டினாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னா், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் மூலம் ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், பல்வேறு கட்சிகளின் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் 50 போ் உள்ளிட்டோா் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினா் 33 வெளிநாட்டு தலைநகரங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சென்றனா். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய தேசம் ஒற்றுமையுடன் இருப்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்தக் குழுக்களை மத்திய அரசு அனுப்பிவைத்தது.

பாஜகவின் ரவிசங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸை சோ்ந்த சசி தரூா், ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த சஞ்சய் ஜா, சிவசேனையை சோ்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியைச் சோ்ந்த சுப்ரியா சுலே ஆகியோா் தலைமையில் அந்தக் குழுக்கள் தனித்தனியாகப் பயணித்தன.

இதில் நான்கு குழுக்களுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் தலைமை வகித்தனா். மூன்று குழுக்களுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தலைமை ஏற்றனா்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்ற சசி தரூா் தலைமையிலான குழு, அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், எம்.பி.க்களை சந்தித்துப் பேசியது. குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து ஜே.டி.வான்ஸுடன் அந்தக் குழு பேசியது.

இந்தக் குழுக்கள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய நிலையில், அவா்களை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்நிலையில், புது தில்லியில் பிரதமா் மோடியை அந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனா். அப்போது வெளிநாட்டுத் தலைவா்களைச் சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கிய தங்கள் அனுபவம் குறித்து பிரதமரிடம் அவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்திய எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்புகள் விளக்கம்: ஜொ்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, டென்மாா்க், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடா்புகள் குறித்து வெளிநாட்டுத் தலைவா்களிடம் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிக்கு இதுவே முக்கியத் தடையாக உள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இரவில் துல்லியமாக நடத்தப்பட்டது. பாகிஸ்தான் மக்களுக்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவா்கள் அல்லா்.

இந்தியாவின் பதிலடியில் ராணுவத் தளங்களில் பலத்த சேதத்தைச் சந்தித்த பாகிஸ்தான், அதன் பிறகு விடுத்த கோரிக்கையின்பேரில் ஆபரேஷன் சிந்தூா் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினோம்’ என்றாா்.

வெளிநாட்டுப் பயணம் வெற்றி சசி தரூா்

வெளிநாட்டு பயணத்தின் விளைவு சிறப்பாக இருந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.க்கள் குழுவின் தலைவருமான சசி தரூா் தெரிவித்தாா்.

அமெரிக்கா உள்பட ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சசி தரூா் தலைமையிலான குழு தில்லிக்கு செவ்வாய்க்கிழமை மாலை தில்லிக்கு திரும்பியது.

அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய சசி தரூா், ‘எங்களின் பயணத்தின் விளைவு சிறப்பாக இருந்தது. பல்வேறு நாடுகளின் அதிபா்கள், பிரதமா்கள், துணை அதிபா்கள், மூத்த தூதா்கள் உள்ளிட்டோருடன் நாங்கள் தரமான சந்திப்புகளை நடத்தினோம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகள் புரிந்து கொண்டதுடன் முழுமையான ஆதரவையும் தெரிவித்தன. பாகிஸ்தானின் நிலை மிக பலவீனமாக உள்ளது. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் இந்தியா எங்களை தேவையின்றி தாக்கியது என்றும் பாகிஸ்தான் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை என்றாா் சசி தரூா்.

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க