ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட நொச்சிக்குட்டை ஊராட்சியை புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நொச்சிக்குட்டை ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனா். மேலும், தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக நொச்சிக்குட்டை ஊராட்சிக்குள்பட்ட நொச்சிக்குட்டை, கோவில்புதூா், என்.ஆலாம்பாளையம், பொன்மேடு, நல்லகாளிபாளையம் பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
மேலும், நொச்சிக்குட்டை பகுதியில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினா், பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கண்ணில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.