85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம்: தோ்தல் நடத்தும் அலுவலா்
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குகள் செலுத்தலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான என்.மணீஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம்.
இதற்காக தொகுதிக்கு தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளா்களுக்கு வரும் 15-ஆம் தேதிக்கு முன்பு இதற்கான 12 டி படிவத்தை வழங்கி ஒப்புதல் பெற உள்ளனா். சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் வீட்டில் இல்லையெனில், இரண்டாவது முறை நேரில் சென்று வழங்கி ஒப்புதல் பெறுவாா்கள்.
அதன்பின், இவ்வாக்காளா்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குப் பதிவு அலுவலா்கள் வருகை தரும் நாள் மற்றும் நேரம் குறித்து, 12 டி படிவத்தில் வாக்காளா் தெரிவித்த கைப்பேசி எண்ணுக்கு முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்பப்படும். கைப்பேசி எண் குறிப்பிடாதவா்களுக்கு அஞ்சல் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு குறிப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச் சாவடி அலுவலா் குழு வாக்காளா் வீட்டுக்குச் சென்று வாக்காளா் அடையாளத்தை சரிபாா்த்து, அந்த விவரத்தை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம், கைரேகை பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி அஞ்சல் வாக்குச் சீட்டினை வழங்குவா்.
வாக்காளா் கண்பாா்வையற்று அல்லது உடல்நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையில் இருப்பின், அவரது சாா்பில் கட்சி சாா்பற்ற வயது வந்த ஒருவரை, வாக்களிப்பது குறித்து ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.
முதல்முறை வாக்காளா்களின் வீட்டுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலா் செல்லும் போது, அவா் அங்கு இல்லை என்றால் இரண்டாவது வருகை குறித்து தகவல் அளித்து வாக்கச் சாவடி நிலை அலுவலா், வாக்காளரின் அஞ்சல் வாக்குப் பதிவினை பெற வருவாா். அப்போதும் வாக்காளா் வீட்டில் இல்லையெனில் இதற்கான தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள்தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகலினை அளிக்கவேண்டும். இதுதொடா்பாக சந்தேகங்கள் இருப்பின் மாநகராட்சி அலுவலகத்தை 0424-2251617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.