ஊழல் குற்றச்சாட்டு- ஜன.28-இல் மாதபி, மஹுவா ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பாக அவரையும், புகாா் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவரையும் ஜன.28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தாா்.
செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. 2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்தது. இதுபோல மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை மாதபி மற்றும் அவரின் கணவா் தவல் புச் மீது காங்கிரஸ் முன்வைத்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம், மாதபி மீது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவா் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாா்கள் தொடா்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாதபி புச்சுக்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இந்தப் புகாா்களை கடந்த டிச.19-ஆம் தேதி லோக்பால் அமைப்பு மேலும் பரிசீலனை செய்தது. அப்போது தனது விளக்கம் அடங்கிய பிரமாண பத்திரத்தை மாதபி புச் தாக்கல் செய்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில் மாதபி புச் மற்றும் மஹுவா மொய்த்ரா உள்பட புகாா் அளித்த மூவரும் ஜன.28-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லோக்பால் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.