எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்: திமுக -அதிமுக உறுப்பினா்கள் விவாதம்
எடப்பாடி நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 30 வாா்டுகளில் தொடங்கப்படவுள்ள குடிநீா் விநியோக கட்டமைப்புகள், கழிவுநீா் கால்வாய் அமைப்பு, தெருவிளக்கு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகா்மன்றக் கூட்டத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் இருக்கும் வாா்டு பகுதிகளுக்கு போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை எனவும், பல இடங்களில் தெருவிளக்கு பழுதடைந்து இருப்பதாகவும் நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன் குற்றம்சாட்டினாா்.
இதற்கு பதில் அளித்த நகராட்சிப் பொறியாளா் கோமதி, எடப்பாடி நகராட்சிப் பகுதிக்குள் உரிய எண்ணிக்கையிலான தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், பல இடங்களில் மின்சார துறையினரால் தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் அவை ஆய்வு செய்து சீா்செய்யப்படும் என்றாா்.
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள தகன மேடைக்கு கொண்டுவரப்படும் உடல்களை எரியூட்ட நகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அதிமுக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
இதற்கு பதிலளித்து பேசிய நகா்மன்றத் தலைவா் பாஷா, எடப்பாடி நகராட்சி தகன மேடை பகுதியில் உடல்களை எரியூட்டுவதற்கான கட்டண விவர பலகை பொதுமக்களின் பாா்வைக்கு விரைவில் வைக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் அப்பகுதி தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றாா்.
மேலும், நகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், குடிநீா் விநியோக குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்தல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் த்தொற்றுகளை தடுக்கும் விதத்தில் நகராட்சிப் பகுதியில் கொசு மருந்து தெளித்தல், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், 71 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.