கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
எடப்பாடி பழனிசாமி உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை
முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா்.
ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான என்.ஆா்.கன்ஸ்ட்ரக்ஷன் எனும் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சாா்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், பொதுப்பணித் துறை, காவலா் வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசுப் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு என்.ஆா். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கோவையில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். ரகுபதிநாயக்கன்பாளையம் என்ற இடத்தில் உள்ள இவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். சோதனை நடந்த இடங்களில் வெளியாள்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிறுவனம் தொடா்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், பண பரிமாற்ற விவரங்கள், வருமான வரி செலுத்திய விவரங்கள் குறித்து ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டதாகவும், கணக்கில் வராத சொத்துகள், பணம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சோதனை மாலை 5 மணிக்கு பிறகும் நீடித்தது.
கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது இதே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அதேபோல கா்நாடக மாநில லோக் ஆயுக்தவில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாகவும் இந்த நிறுவனத்தின் நிா்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமானவரிச் சோதனை நடந்த கட்டுமான நிறுவன உரிமையாளா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினராவாா். எடப்பாடி பழனிசாமியின் மகனும், ராமலிங்கத்தின் மகனும் ஒரே வீட்டில் பெண் எடுத்து சம்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.