`என்னைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்' - ஜிம் மாஸ்டர் கொடுத்த புகாரில் அதிரடி திருப்பம்
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய ஆண் நண்பர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
இளம்பெண் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். என்னுடைய அப்பா ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நான் பிளஸ் டூ படித்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். அப்போது அவரும் பிளஸ் டூ படித்து வந்தார். நாங்கள் இருவரும் பழகி வந்த நிலையில் என்னை விக்னேஷ்வர் காதலிப்பதாகக் கூறினார். அதனால் அவரின் காதலை நான் ஏற்றுக் கொண்டேன்.
நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். மகாபலிபுரத்துக்குச் சென்ற போது என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளைக் கூறி என்னுடன் அவர் நெருங்கி பழகினார். பள்ளி படிப்பை முடிந்த பிறகு இருவரும் போரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்தோம். அப்போதும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே பல இடங்களுக்குச் சென்றோம். அதை செல்போனில் போட்டோவாகவும் வீடியோவாகவும் விக்னேஷ்வர் எடுத்தார். எங்களின் காதல் விவகாரம் கல்லூரிக்கு தெரிந்தால் எங்களை பத்து நாள்கள் சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்.
அதோடு எங்களின் பெற்றோருக்கும் காதல் விஷயம் தெரிந்தது. பின்னர் நாங்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்தோம். இதையடுத்து கடந்த 2019-ல் நாங்கள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணிக்கு சேர்ந்தோம். ஒரு வருடம் என்னுடன் வேலை செய்த விக்னேஷ்வர், சொந்தமாக ஜிம் ஒன்றை ஈக்காட்டுதாங்கலில் நடத்தி வந்தார். வாழ்க்கையில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் விக்னேஷ்வர் என்னிடம் கூறினார். 2023-ம் ஆண்டு நவம்பரில் விக்னேஷ்வரிடம் திருமணம் குறித்து பேசினேன். அப்போது அவர் விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறினார். அதன்படி 2024-ம் ஆண்டு ஜனவரியில் விக்னேஷ்வரின் குடும்பத்தினர் என்னுடைய வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்தனர். அப்போது வரதட்சணையாக 80 சவரன் தங்க நகையும் காரும் வாங்கித் தரும்படி கேட்டனர். மேலும் திருமண நிகழ்ச்சியை ஸ்டார் ஹோட்டலில் நடத்த வேண்டும் எனக் கூறினர்.
அதற்கு என்னுடைய குடும்பத்தினர் அந்தளவுக்கு வரதட்சனை செய்ய எங்களுக்கு வசதியில்லை எனக் கூறினர். எங்களால் முடிந்தளவு செய்கிறோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து 10.4.2024-ம் தேதி கிண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு என்னை வரும்படி விக்னேஷ்வர் அழைத்தார். அங்கு நான் சென்ற போது அன்பாக என்னிடம் பேசிய விக்னேஷ்வர், அங்கு என்னுடன் சந்தோஷமாக இருந்தார். சில நாள்களுக்கு பிறகு திருமணம் குறித்து விக்னேஷ்வரிடம் நான் கேட்டதற்கு ஜாதகம் பொருத்தம் சரியில்லை என்று கூறினார். அதோடு தன்னை மறந்துவிடும்படி விக்னேஷ்வர் என்னிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். அதற்கு ஏதாவது பிரச்னை செய்தால் நீயும் நானும் ஒன்றாக இருந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.
இதையடுத்து 21.4.2024-ம் தேதி நானும் என் குடும்பத்தினரும் விக்னேஷ்வரின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் பேசினோம். அதற்கு அவரின் குடும்பத்தினர் என்னையும் என் குடும்பத்தினரையும் அவதூறாக பேசினார்கள். அப்போது நானும் விக்னேஷ்வரும் கடந்த பத்தாண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் என்று கூறினேன். அதற்கு இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம் என விக்னேஷ்வரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.கடந்த 13.5.2024-ம் தேதி குமரன்நகர் காவல் நிலையத்தில் விக்னேஷ்வர், எங்கள் மீது புகாரளித்தார். அதனால் நாங்கள் காவல் நிலையததுக்குச் சென்று விசாரித்தபோது விக்னேஷ்வரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சி செய்வதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் விக்னேஷ்வருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த தகவலும் தெரிந்தது. அதனால் நான் மனவேதனையடைந்தேன். எனவே என்னை ஏமாற்றிய விக்னேஷ்வர், அதற்கு உடந்தையாக இருந்த அவரின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லில்லி வழக்குப்பதிவு செய்து ஜிம் மாஸ்டர் விக்னேஷ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...