`என்னை எப்படி இடிக்கலாம்?'- ம.பி-யில் தன்னை இடித்து தள்ளிய காரை பழிவாங்கிய நாய்.. வைரலாகும் வீடியோ!
மத்திய பிரதேச மாநிலம், சாகர் என்ற இடத்தில் பிரஹலாடு சிங் கோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்காக தனது காரில் புறப்பட்டார். கார் கிளம்பி 500 மீட்டர் தூரத்தில் சென்ற போது சாலையோரம் படுத்திருந்த நாய் மீது லேசாக இடித்துக்கொண்டது. கார் இடித்ததில் நாய்க்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. ஆனாலும் கார் சம்பவ இடத்தை கடந்ததும் பல மீட்டர் தூரத்திற்கு நாய் காரை விரட்டிச்சென்று குரைத்துக்கொண்டே இருந்தது. அப்பிரச்னை அப்போதே முடிந்து விட்டது என்று பார்த்தால், நாய் நடந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்து பழிவாங்கிவிட்டது.
கோஷ் திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்து இரவு காரை வீட்டிற்கு வெளியில் நிறுத்தினார். அந்த காரின் வரவுக்காக பாதிக்கப்பட்ட நாய் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் சென்ற பிறகு கோபத்தில் இருந்த நாய் அந்த காரை கடித்து குதற ஆரம்பித்தது. பல முறை காரை கடித்தது. இதனால் கார் முழுக்க பெயிண்ட் பெயர்ந்து கீறல்கள் ஏற்பட்டது. காலையில் காரை பார்த்த அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று கார் உரிமையாளர் கருதினார்.
யார் அந்த நபர் என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்ததும் கார் உரிமையாளர் மேலும் அதிர்ச்சியாகிவிட்டார். நாய் ஒன்று அவரது காரை ஓடி ஓடி தாக்கி சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த நாயைத்தான் பகலில் கார் உரிமையாளர் கார் மூலம் லேசாக இடித்திருந்தார். அதற்கு பழிவாங்க நாய் காரை கடித்து சேதப்படுத்தி இருந்தது. இப்போது நாயை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் கார் உரிமையாளர். நாய் காரை கடித்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.