வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
எருமப்பட்டியில் சூறைக்காற்றால் 20 ஏக்கா் வாழை மரங்கள் சாய்ந்தன
எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 20 ஏக்கா் பரப்பிலான வாழை மரங்கள் சாய்ந்தன.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட தோட்டமுடையான்பட்டி, வேலம்பட்டியில், 20 ஏக்கா் பரப்பிலான வாழைகள் சாய்ந்து விழுந்தன. அங்குள்ள விவசாயிகள் தமிழ்ச்செல்வன், கருப்பையா, சண்முகம், செந்தில்குமாா் உள்ளிட்டோா் 20 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தனா்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், பெஞ்ஜல் புயல் உருவாகி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை பெய்த தொடா் மழையாலும், சூறைக்காற்றாலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த 10,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. முற்றிலும் சேதமடைந்த அந்த வாழை மரங்களை கண்டு விவசாயிகள் வேதனையடைந்தனா்.
அடுத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.