எலான் எனும் எந்திரன் 2: ஒரிஜினல் ஐடியாக்காரன்; முதல் தொழிலிலே ரூ.180 கோடி பார்த்த அக்மார்க் வியாபாரி
ஏற்கனவே இருக்கும் ஒரு வணிகத்தில் ஒரு அப்டேடட் வெர்ஷனை அல்லது கூடுதல் சேவைகளை அல்லது அதிக வசதிகளை களமிறக்குவது ஹரிசாண்டல் ப்ராகிரஸ்.
உதாரணத்துக்கு போர்டர் நிறுவனச் சேவைகளைச் சொல்லலாம். கடந்த தசாப்தத்தில், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் சேவை, பெரிய போக்குவரத்து & சரக்கு கையாளும் நிறுவனங்களிடமே இருந்தது. அதை உடைத்து, ஒரு சாதாரண மனிதர் கூட, தன் மொபைல் போனிலிருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்ட இடத்துக்கு, குறிப்பிட்ட வாகனத்தில் அனுப்பி வைக்க முடியும் என்கிற சூழலைக் கொண்டு வந்தது போர்டர் ஆப்.
மற்றொரு நல்லுதாரணம் ஸ்விக்கி, சொமேட்டோ. 10 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில், சில பெரிய உணவகத்தில் மட்டுமே உணவை போனில் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே டெலிவரி செய்தனர். ஆனால் இன்று ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் ஒரு சாதாரண வாடிக்கையாளர் கூட, 10 ரூபாய் சாக்லேட் முதல் பக்கெட் பிரியாணி வரை மொபைலில் ஆர்டர் செய்து, டோர் டெலிவரி பெற முடியும்.
அம்பானி, அதானி போன்ற உலகப் பணக்காரர்கள் பலரும், இந்த வகையிலான அப்கிரேடட் பிசினஸைத் தான் செய்து வருகிறார்கள்.
இதுவரை இல்லாத ஒரு விஷயத்தை புதிதாக உருவாக்கி வணிக ரீதியாக வெற்றி பெறுவது.
உதாரணத்துக்கு யூபிஐ பணப்பரிவர்த்தனை, டிசைனிங் செய்யத் தெரியாத நபர் கூட கொஞ்சம் ஆர்வம் இருந்தால் டெம்பிளேட்களை வைத்து தனக்குப் பிடித்த டிசைன்களைச் செய்து கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்ட கேன்வா, பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிக்னல் மெசேஜிங் ஆப்… போன்ற சேவைகளைச் சொல்லலாம்.
இப்படி ஒரு சேவையை வழங்கினால் மக்கள் பயன்பெறுவர் என்பதை அறிந்து கொண்டு, அதற்கு ஒவ்வொரு செங்கலாக அடுக்கி, கட்டடத்தை எழுப்பி, கடைசியில் குறைந்தபட்சமாகவாவது வணிக ரீதியாகவும் வெற்றி பெறுவது தான் இந்த Vertical Progress வகை பிசினஸ்.
இந்த வகையான பிசினஸ்களுக்கு பெரிய முன்னாதரணங்கள் இருக்காது. உலகில் 1 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே இத்தகைய ரிஸ்கான புதிய பிசினஸை தைரியமாக சிந்திப்பர், அசாத்தியமாக செயல்படுத்தி வெற்றியும் பெறுவர்.
அப்படிப்பட்ட Vertical Progress வியாபாரத்தில் ஜெயிப்பவர்களின் வெற்றி அளப்பரியதாக, பிரமாண்டமாக இருக்கும். உதாரணம்: அமேசானின் ஜெஃப் பிசாஸ், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ், மெடாவின் மார்க் சக்கர்பெர்க்.
இந்த வரிசையில் தான் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார் எலான் மஸ்க். அவருடைய Zip2, X.com, Space X, Tesla, The Boring Company, Neuralink என எல்லா வகையான பிசினஸ்களும் கிட்டத்தட்ட Vertical Progress வகையைச் சேர்ந்தவை தான் எனலாம். அந்தந்த காலத்தில், எலானின் நிறுவனங்கள் நிகழ்த்தியது ஒரு புது முயற்சி தான்.
பொதுவாக இப்படி புதிய விஷயங்களை முயற்சி செய்யும் போது அதில் வெற்றி பெறாமல் போன பல திறமைசாலிகளை உதாரணமாகச் சொல்லலாம். உதாரணத்துக்கு Napster தொடங்கிய ஷான் பார்க்கர், தமிழ்நாட்டில் D2H திட்டத்தைக் கொண்டு வர விரும்பிய கமல் ஹாசன் என பட்டியல் போடலாம்.
ஆனால் எலான் மஸ்கின் Zip2, X.com, Space X, Tesla என கிட்டத்தட்ட அவர் தொடங்கி பல திட்டங்கள் இன்று பல்லாயிரம் கோடி மதிப்பிலான பிசினஸ்களாக உருவெடுத்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அதோடு, ஒரே நேரத்தில் ஒரு தொழிலைச் செய்து லாபமீட்டவே சராசரி மனிதர்கள் திணறும் போது, பல தொழிலைச் செய்து அதில் சிலவற்றிலாவது மிகப்பெரிய வெற்றி கண்டவர் சீரியல் தொழிலதிபர் எலான் மஸ்க்.
அதுவும் திருபாய் அம்பானி போல… சேலை, சேலைக்கான பாலியஸ்டர் உற்பத்தி, பாலியஸ்டருக்கான ரசாயண உற்பத்தி, பாலியஸ்டர் ரசாயணத்துக்காக பெட்ரோலிய சுத்தீகரிப்பு என ஒரே தொழிலுக்குள் சுழல்பவரல்ல எலான்.
பணப்பரிவர்த்தனை, ஆட்டோமொபைல், விண்வெளி, அதிவேகப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு… என வெவ்வேறு துறையில் பல நியூ ஜென் நிறுவனங்களை நடத்துபவர் எலான். ஆகையால் தான் எலான் மஸ்கை இந்த உலகம் உற்று நோக்குகிறது. நாமும் அவரைப் படிக்கிறோம்.
ஒரு தொழிலை சிறிதாகத் தொடங்கு, அதில் வரும் லாபத்தை வைத்து அத்தொழிலை வளர்த்தெடு, தொழில் நல்ல வருமானம் ஈட்டும் போது விற்று பணம் பார். அப்பணத்தை வைத்து உன் கனவுத் திட்டங்களுக்கு உயிர்கொடு. ரிப்பீட். இது தான் எலானின் பாதை.
பதின் வயதிலேயே வீடியோ கேம் ப்ரோகிராம் செய்து 500 அமெரிக்க டாலர் பார்த்தது, கல்லூரி செலவுகளுக்கு வீட்டையே கிளப்பாக்கி, சக மாணவர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது எல்லாம் எலான் மஸ்க் அறியாத வயதில் செய்த கருவேப்பிலை, கொத்தமல்லி பிசினஸ்.
Zip2:
கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த பின், தன் சகோதரர் கிம்பல் & கிரெக் கோரி (Greg Kouri) உடன் இணைந்து, 1995-ல் Zip2 என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் எலான் மஸ்க். இணையம் தலைதூக்கத் தொடங்கி இருந்த சமயத்தில், திசை & வரைபடங்கள் கொண்ட நகர இணைய வழிகாட்டி (A City guide with maps and directions) வலைதளத்தை உருவாக்கினார்.
முதல் தொழிலே மகா வெற்றி. மஸ்கின் யோசனை கரன்சி நோட்டுக்களை அச்சடிக்கத் தொடங்கியது. தி நியூ யார்க் டைம்ஸ் & சிகாகோ டிரிபியூன் போன்ற பத்திரிகைகள் Zip2 உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது.
பகலில் வலைதளத்தைப் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படக் கூடாதென இரவில் வெப்சைட் கோடிங் வேலைகளைப் எலான் மஸ்க் பார்ப்பாராம். அந்த அளவுக்கு தொழில் சுத்தம். கடைசியில், 1999 பிப்ரவரியில், Zip2 வலைதளத்தை காம்பெக் (Compaq) என்கிற நிறுவனம் 307 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
அதில் எலான் மஸ்கின் பங்காக அவருக்கு 22 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்தது. இதை இன்றைய தேதிக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் (1USD = 82 INR) கணக்கிட்டால் சுமார் 180.4 கோடி இந்திய ரூபாய்.
முதல் வியாபாரம் எப்படி இணையத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ, அப்படி அடுத்த வியாபாரமும் மக்களின் வேலைப் பழுவை குறைப்பதாகவும், இணையம் வழி செய்வதன் மூலம் நிறுவனத்தின் வேலையும் குறைவாக இருக்க வேண்டுமெனக் கருதினார் எலான் மஸ்க்.
1999 பிப்ரவரியில், Zip2 நிறுவனத்தை விற்று வந்த பணத்தில், அடுத்த மாதமே (1999 மார்ச்) பணப்பரிவர்த்தனையில் ஒரு புதிய புரட்சியை நிகழ்த்த அடித்தளமிட்டார் எலான் மஸ்க். அப்புரட்சியின் வாகனமாக அமைந்த தளத்தின் பெயர் x.com.
x.com என்றால் ட்விட்டர் தானே. ட்விட்டரை எலான் மஸ்க் தொடங்கவில்லையே. ஜாக் டார்ஸி தானே தொடங்கினார் என்கிறீர்களா. சாரா ரூகோ, சபர் கரோ. அடுத்த அத்தியாயத்தில் அலசுவோம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...