Ajmer Sharif: `அஜ்மீர் தர்காவில் சிவன் கோயில்?' - இந்து சேனாவின் மனுவும் நீதிமன்...
எளிய மக்களுக்கான நீதியை காக்க வேண்டியது நமது கடமை: முன்னாள் நீதிபதி
காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சட்டத் துறை சார்பில் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும், அரசியலமைப்பின் முகவுரையை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா நவீன இந்தியாவில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
அப்போது அவர், “ஜனநாயகம் மற்றும் நீதியை உறுதி செய்வதில் இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ள சட்டப்பூர்வ உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சட்டத்தின் வரையறைகளின்படி எளிய மக்களுக்கான நீதியையும், சமத்துவத்தின் கோட்பாடுகளையும் பேணிக்காக்க வேண்டியது நமது கடமை. அதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக ''அரசியலமைப்பு: நமது மகிழ்ச்சியின் அடிப்படை'' எனும் தலைப்பில் இந்திய அரசியலமைப்பின் மேன்மையை பறைசாற்றும் வகையிலான நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றம் செய்தனர்.
மேலும் நாட்டின் பல்வேறு கலாசாரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.