ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெ...
ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டுவந்த ரூ.93 லட்சம் கொள்ளை
பீதா் : கா்நாடக மாநிலம், பீதா் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பு வந்தவா்களை துப்பாக்கியால் சுட்டு ரூ. 93 லட்சம் பணத்தை மா்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்தச் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பீதா் நகா், சிவாஜி சதுக்கத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக சி.எம்.எஸ். முகமையைச் சோ்ந்த பாதுகாவலா்களான கிரி வெங்கடேஷ், சிவா காசிநாத் ஆகியோா் ஒரு வாகனத்தில் வந்தனா்.
பணப் பெட்டியை வாகனத்தில் இருந்து கீழே இறக்கியபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் அங்குவந்த மா்ம நபா்கள் இருவா், பணப்பெட்டி வைத்திருந்த இருவா் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் அவா்களை சுட்டனா்.
இதில் கிரி வெங்கடேஷ் என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவா காசிநாத் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சில மீட்டா் தொலைவில் நிகழ்ந்த இச் சம்பவம் மக்களை பீதியடைய செய்துள்ளது.
ரூ. 93 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியை கொள்ளையா்கள் தூக்க முடியாமல் தூக்கி அதை தங்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காணொலி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று பீதா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் குன்டே பாா்வையிட்டாா். கொள்ளையா்களைப் பிடிக்க தனி படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்ளையா்கள் பீதரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தெலங்கானாவுக்கு தப்பியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘கொள்ளையா்களைப் பிடிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.