`ஏன் வீட்டுக்குக் கொண்டு வந்த?' - கொலை செய்யப்பட்ட இளைஞர்; தாய், சகோதரர்கள் கைது
சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டுக்கு கோழிக்கறி வாங்கிச் சென்றதற்காக சொந்த சகோதரர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போபாலில் நடைபெற்றுள்ளது.
கொலை இரண்டு மகன்களை காப்பாற்றுவதற்காக குற்றத்தை மறைக்க முயன்றதால் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக வீட்டுக்கு வெளியில் கடைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடும் அன்ஷல் யாதவ் (கொலை செய்யப்பட்டவர்) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அசைவ உணவை வாங்கிச் சென்றதால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் அசைவ உணவை எடுத்துவருதை அன்ஷலினின் அண்ணன் குல்தீப், தம்பி அமன் எதிர்த்துள்ளனர்.
உணவுப் பொட்டலத்துடன் சமைலறையில் சென்று அமர்ந்த அன்ஷல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனைக் காண்பித்து அமன் மற்றும் குல்தீப்பை கேலி செய்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபமடைந்த அமனும் குல்தீப்பும் கயிற்றைக் கொண்டு அன்ஷலின் கழுத்தை நெரித்துள்ளனர்.
இறந்த அன்ஷலின் உடலை அவரது சகோதரர்களும் தாய் அனிதாவும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர்.
தனியார் மருத்துவமனை சார்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அன்ஷலின் கழுத்தில் இருந்த தடம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறையினர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும்போது, அனிதா கொலையை மறைக்க முயன்றுள்ளார். விசாரணையின் முடிவில், இரண்டு கொலைகார சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனையில் அன்ஷல் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர்களது தாயிடமும் கேள்விகளை எழுப்பி மூவருமே குற்றவாளிகள் என்பதை உறுதி செய்துள்ளனர். அத்துடன் அனிதா கொலைக்கு பயன்படுத்திய கயிறையும் மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் கூறியுள்ள தகவல்களின்படி, மூன்று சகோதரர்களும் அடிக்கடி சண்டையிடுபவர்களாக இருந்துள்ளனர். மது மற்றும் பிற போதை பழக்கங்களால் சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.