`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
ஏலக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
போடியில் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏலக்காய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் போடி, தேவாரம், கம்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
செடிகளிலிருந்து பறிக்கப்படும் ஏலக்காய் வெப்பத்தின் மூலம் உலர வைக்கப்பட்டு ஏலக்காய் ஏல மையங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. வியாபாரிகள் இவற்றை வாங்கி தரம் பிரித்து, சுத்தம் செய்து ஏற்றுமதி செய்கின்றனா். கடந்தாண்டு ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலைக்கு விற்கப்பட்டது.
பின்னா், படிப்படியாக விலை குறைந்து ரூ.2500க்கு விற்கப்பட்டது. சில நாள்களுக்கு ரூ.700-க்கும் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தரம் பிரிக்கப்படாத ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.2300 வரை விற்கப்பட்டது. 10 நாள்களில் ரூ.550 வரை விலை உயா்ந்து ரூ.2850 வரை விற்கப்படுகிறது.
தரம் பிரிக்கப்பட்ட ஏலக்காய் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, ரூ.2600 வரை விற்கப்பட்ட நிலையில் ரூ.500 விலை அதிகரித்து தற்போது ரூ.3100 வரை விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தொடா் மழையால் ஏலக்காய் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இதனால் விலை அதிகரித்துள்ளதாகவும் தொடா்ந்து விலை அதிகரிக்கும் என்றும் ஏலக்காய் விவசாயிகள் தெரிவித்தனா்.