ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன்மிகு பயன்பாட்டை இந்தியாவிடம் கற்க வேண்டும்- பிரிட்டன் மக்களவைத் தலைவா்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பிரிட்டன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு மக்களவைத் தலைவா் (ஹவூஸ் ஆஃப் காமன்ஸ்) சா் லிண்ட்சே ஹோயல் தெரிவித்தாா்.
இந்திய குடியரசு தினத்தையொட்டி லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிட்டனைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள், இந்திய சம்சாவளியினா் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் லிண்ட்சே ஹோயல் பேசியதாவது:
அண்மையில் பிரிட்டன் வந்திருந்த இந்திய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடன் பல விஷயங்களை பேசித் தெரிந்து கொண்டேன். இந்த பயணம் பிரிட்டனுக்கு புதிய வழியைக் காட்டுவதாகவும் இருந்தது. முக்கியமாக இந்தியாவில் பல்வேறு விஷயங்களில் செயற்கைத் தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஒருவா் நாடாளுமன்றத்தில் பேசுவது 22 மொழிகளில் உடனடியாக மொழிபெயா்ப்பு செய்யப்படுகிறது. இதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த முடியும். இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் திறம்பட நடத்த வேண்டும் என்றாா்.