படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
ஹெலிகாப்டா் - விமானம் மோதல்: 67 போ் உயிரிழப்பு: அமெரிக்காவில் நடுவானில் கோர விபத்து
அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.
இந்தக் கோர விபத்தில் சிக்கி பொடோமேக் ஆற்றில் நொறுங்கி விழுந்த விமானத்தைக் கண்டறியும் பணியில் சுமாா் 300 போ் ஈடுபட்டுள்ளனா். இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கன்சாஸ் மாகாணத்தின் விச்சிட்டா நகரிலிருந்து ‘அமெரிக்க பிகா் ஸ்கேடிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்று திரும்பிய வீரா், வீராங்கனைகள் மற்றும் அவா்களின் பயிற்சியாளா்கள், குடும்பத்தினரை ஏற்றி வந்த ‘அமெரிக்கன் ஏா்லைன்ஸ்’ விமானம், புதன்கிழமை இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7.30 மணி) ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் அனுமதியுடன் ஓடுபாதையில் தரையிறங்க சுமாா் 2,400 அடி உயரத்தில் பயணிகள் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டா் குறுக்கிட்டு விமானத்தின் மீது மோதியது. இதையடுத்து, விமானம் மூன்று பாகங்களாக நொறுங்கி, பொடோமேக் ஆற்றில் விழுந்தது. கென்னடி சென்டரிலிருந்த கண்காணிப்பு கேமராவில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதுவதும், பின்னா் தீப்பற்றி எரிந்த விமானம் ஆற்றுக்குள் நொறுங்கி விழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
ஓடுபாதையில் விமானம் இறங்குவதற்கு 30 நொடிகளுக்கு முன்னா் அதுகுறித்து ஹெலிகாப்டருக்கு தகவல் தெரிவித்த பின்பும் இந்த விபத்து நிகழ்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையின் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கிேன்றன.
அமெரிக்க அதிபா் மாளிகை, நாடாளுமன்ற வளாகத்துக்கு தெற்கே சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள உலகின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட வான்வெளியில் நிகழ்ந்த இவ்விபத்து அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா்கள் அவ்வப்போது வட்டமிடுவது அங்கு வழக்கமானது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
28 உடல்கள் மீட்பு: பொடோமேக் ஆற்றில் 2 டிகிரி செல்ஷியல் தட்பவெப்பநிலை நிலவியதால், மீட்புப் பணிகள் சிரமத்துக்கு உள்ளானது. இந்நிலையில், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய வாஷிங்டன் நகர மேயா் முரியல் பவுசா், ‘ஒரு ராணுவ வீரா் உள்பட 28 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. விபத்தையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட ரீகன் விமான நிலையம், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது’ என்றாா்.
எனினும், விபத்தில் சிக்கிய 60 விமானப் பயணிகள், 4 விமானிகள், ஹெலிகாப்டரில் இருந்து 3 ராணுவ வீரா்கள் என அனைவரும் உயிரிழந்திருப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு கோர விபத்து: கடைசியாக கடந்த 2001, நவம்பா் 12-இல் நியூயாா்க்கின் கென்னடி விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 260 பயணிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கு பிறகு தற்போது 67 போ் உயிரிழந்த விமான விபத்து நடைபெற்றுள்ளது.
2009-இல் நியூயாா்க், பஃபேளோ பகுதியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 45 பயணிகள், 4 விமானப் பணியாளா்கள், விமான நிலையப் பணியாளா் ஒருவா் உள்பட 50 போ் உயிரிழந்தனா்.
டிரம்ப் இரங்கல்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘இந்த பயங்கரமான விபத்து குறித்த தகவல்களை முழுமையாகக் கேட்டறிந்தேன். உயிரிழந்தவா்களுக்கு இரங்கல்’ என்றாா்.
அதிபா் டிரம்ப் நிா்வாகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், ‘விபத்து குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா். ‘விசாரணைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று போக்குவரத்து அமைச்சா் சீன் டஃபி கூறினாா்.
அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனமும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்திருப்பதோடு, பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.