ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
32 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். காயம் காரணமாக பந்துவீசாமல் பேட்டிங்கும் பெரிதாக சோபிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். 2017இல் புணே அணியில் சிறப்பாக விளையாடினார்.
ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது முறையாக இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற இந்த ஏலத்துக்காக மொத்தம் 1,574 வீரா்கள் தங்களை பதிவு செய்திருந்தனா்.
அதில் 1,165 போ் இந்தியா்கள், 409 போ் வெளிநாட்டவா்கள். மொத்த வீரா்களில் 320 போ் அனுபவ வீரா்களாகவும், 1,224 போ் புதியவா்களாகவும் இருந்தனா்.
இதில் 52 இங்கிலாந்து வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றார்கள். இதில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது:
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி காலகட்டத்தில் இருக்கிறேன். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கு எது சரியானதோ அதை முடிவெடுக்க வேண்டியது எனது கடமை. இன்னும் என்னால் எவ்வளவு காலம் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
கிரிக்கெட் போட்டிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், நான் முடிந்தவரை இங்கிலாந்து நாட்டு உடையை அணிந்து விளையாட விரும்புகிறேன்.
நான் விளையாடுவதில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே அதைதான் செய்கிறேன். கண்டிப்பாக நான் இந்தமுறை தென்னாப்பிரிக்காவில் இருப்பேன். எனக்கு முன்னால் என்ன இருக்கிறதோ அதைப் பார்க்கவே விரும்புகிறேன்.
எனது உடலுக்கு அடுத்து என்னையும் நான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்குதான் விளையாட முடியும்.