ஐபிஎல் 2025: கொல்கத்தா அணி கேப்டனாக ரஹானே? புதிய திருப்பம்!
அடுத்தாண்டு கோடை கால விடுமுறை நாள்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ‘இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்)’ தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை கடந்த மாதம் இரு நாள்களாக நடைபெற்ற மெகா ஏலத்தில் பல கோடிகளை கொடுத்து எடுத்துக் கொண்டன.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சீசன்களில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் அஜிங்க்ய ரஹானே இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 1.50 கோடி கொடுத்து நடிகர் ஷாருக் கானின் கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ள போதும், அவரை விடுத்து ரஹானேவையே கேப்டனாக்க முனைப்பு காட்டி வருவதாக கேகேஆர் அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்த அணி தரப்பிலிருந்து ஒருவர் கூறியதாவது, “கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்பது 90 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல். அணியை வழிநடத்தும் பொறுப்பு ரஹானேவுக்கு இருப்பதை ஒரு காரணமாக கருத்திற்கொண்டே அவர் இம்முறை கேகேஆர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.