5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும...
ஐஸ்லாந்திலும் குடியேறிய கொசு; இதுவரை இல்லாமல் இருந்ததற்கு காரணம் என்ன? இப்போது வந்தது ஏன்?
ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா உலகில் கொசுக்கள் இல்லாத பகுதிகளாக அறியப்பட்டவை.
ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஐஸ்லாந்தில் கொசுக்கள் இல்லாததற்கு காரணம் என்ன?
ஐஸ்லாந்தின் காலநிலை மிக வேகமாக மாறக்கூடியது. ஒரு நாள் வெப்பமாக இருந்தாலும், மறுநாள் உறைபனி ஏற்படலாம். கொசுக்களுக்கு முட்டையிடவும், புழுக்கள் வளரவும் நிலையான வெப்பநிலையும், தேங்கிய நீரும் அவசியம். ஆனால், ஐஸ்லாந்தின் எரிமலைப் பாறைகள், கடுமையான காற்று மற்றும் அடிக்கடி உறையும் நீர் ஆகியவை நிலையான நீர்நிலைகள் உருவாவதைத் தடுக்கின்றன.

மேலும், ஐஸ்லாந்தில் குளிர்காலம் நீண்டு, 6 முதல் 8 மாதங்கள் வரை நீடிக்கும், ஆனால் கோடைகாலம் வெறும் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால், கொசுக்கள் தங்கள் முழு வளர்ச்சி சுழற்சியை முடிக்க முடியாமல் போகிறது. இந்தக் காரணங்களால், ஐஸ்லாந்து இதுவரை கொசுக்கள் இல்லாத பகுதியாக இருந்து வந்தது.
க்யோஸ் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட கொசுக்கள்
2025 அக்டோபர் 16 அன்று, ஐஸ்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள க்யோஸ் (Kjós) பள்ளத்தாக்கில், கிடவெல் (Kiðafell) என்ற இடத்தில் பூச்சி ஆர்வலர் பியோர்ன் ஹ்ஜால்டாஸன் மூன்று கொசுக்களைக் கண்டறிந்தார். இவற்றில் இரண்டு பெண் கொசுக்களும், ஒரு ஆண் கொசுவும் அடங்கும். இந்தக் கொசுக்கள் குலிசெட்டா அன்னுலாட்டா (Culiseta qannulata) இனத்தைச் சேர்ந்தவை என ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்தின் தாவரவியலாளர் மத்தியாஸ் ஆல்ஃப்ரெட்சன் அடையாளம் கண்டுள்ளார்.
இந்த இனம் குளிர்காலத்தில் கட்டிடங்களின் அடித்தளங்கள் அல்லது களஞ்சியங்களில் அடைபட்டு உயிர்வாழும் திறன் கொண்டது. இது ஐஸ்லாந்து வரலாற்றில் முதல் முறையாக இயற்கை சூழலில் கொசுக்கள் கண்டறியப்பட்ட நிகழ்வாகும்.
இதற்கு முன், கெஃப்லாவிக் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மூலம் வந்த கொசுக்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், அவை இயற்கையில் உயிர்வாழவில்லை.

காலநிலை மாற்றமே காரணமா?
விஞ்ஞானிகள் இந்தக் கொசுக்களின் தோற்றத்திற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்கின்றனர். 2025-ல் ஐஸ்லாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 24.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
இது கொசுக்களுக்கு முட்டையிடவும், வளர்ச்சியடையவும் உகந்த சூழலை உருவாக்கியிருக்கலாம். மேலும், விமானங்கள், கப்பல்கள் அல்லது சரக்கு போக்குவரத்து மூலம் கொசு முட்டைகள் அல்லது புழுக்கள் ஐஸ்லாந்திற்கு வந்திருக்கலாம். உலகளவில், ஏடிஸ் ஏஜிப்தி போன்ற கொசு இனங்கள் இவ்வாறு பரவியுள்ளன.
நிலைத்திருக்குமா இந்த இனம்?
இந்தக் கொசு இனம் ஐஸ்லாந்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வாய்ப்பு குறைவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், இந்தக் கொசுக்கள் அழிந்துவிட வாய்ப்புள்ளது. மேலும், குலிசெட்டா அன்னுலாட்டா இனம் மனிதர்களுக்கு நோய் பரப்பும் திறன் மிகக் குறைவு என்றும், ஐஸ்லாந்தின் குளிர்ந்த காலநிலை நோய் பரவல் அபாயத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை
ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டது, உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்ட உயர்வு மற்றும் புதிய உயிரினங்களின் வருகை ஆகியவை காலநிலை மாற்றத்தின் விளைவுகள். இந்த நிகழ்வு, “கொசுக்கள் அற்ற நாடு” என்ற ஐஸ்லாந்தின் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. தற்போது, அண்டார்டிகா மட்டுமே முழுமையாக கொசுக்கள் இல்லாத பகுதியாக உள்ளது.
இந்தக் கொசுக்களின் வருகை, உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.














