ஐ.நா. சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுா் நியமனம்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநா்களை உள்ளடக்கிய ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் நியமிக்கப்பட்டாா். அவரது இந்தப் பதவிக் காலம் நவம்பா் 12, 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும்.
கவுன்சிலின் மற்ற உறுப்பினா்கள்: ஊழியா்களால் பரிந்துரைக்கப்பட்ட புகழ்பெற்ற சட்ட வல்லுநா் காா்மென் ஆா்டிகாஸ் (உருகுவே); நிா்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட புகழ்பெற்ற சட்ட வல்லுநா் ரோசாலி பால்கின் (ஆஸ்திரேலியா); ஊழியா் பிரதிநிதி ஸ்டீபன் பிரெஜினா (ஆஸ்திரியா); மற்றும் நிா்வாக பிரதிநிதி ஜே போஜெனெல் (அமெரிக்கா) என செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1953-ஆம் ஆண்டு பிறந்த மதன் லோகுா், உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். பின்னா், கடந்த 2018-ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்ற இவா், ஃபிஜி நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். மற்றொரு நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி இவா் ஆவாா்.