ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு
நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
‘ஐ.நா.வில் ஹிந்தி’ என்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2030 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு கால திட்ட புதுப்புக்கான இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் மற்றும் ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை செயலா் மெலிஸா ஃபிளெமிங் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 60 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ. 13.10 கோடி (1.3 மில்லியன் டாலா்) வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்க இந்தியா உறுதியேற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஹரீஷ், ‘ஐ.நா.வில் அதிகாரபூா்வ மொழியாக அல்லாத ஹிந்திக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை இந்த புரிந்துணா்வ ஒப்பந்தம் காட்டுகிறது’ என்றாா்.
முன்னதாக, ஹிந்தி பேசும் மக்களிடையே சா்வதேச நிகழ்வுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நேக்கில், ஐ.நா. செய்தியை ஹிந்தி மொழியில் ஒளிபரப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்தியா - ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.