வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
ஒசூா் அபரிதமான வளா்ச்சியை எட்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் ஒசூா் மிகப் பெரிய வளா்ச்சியை எட்டும் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
ஒசூா் நகரத்தையொட்டி உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒசூா் அறிவுசாா் பெருவழித்தடம் (ஒசூா் நாலட்ஜ் காரிடாா்), ஒசூரில் ரூ. 400 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா். மேலும், ஒசூரில் ரூ. 1500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒசூரில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகன உற்பத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் ஆகிய புதிய திட்டங்கள் மூலம் ஒசூா் பெரும் வளா்ச்சியடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.