ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்கு உரிய நிதியை வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா்: ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக்கோரி திருவாரூரில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் எஸ்.எஸ்.ஏ. வுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதியை உடனடியாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான், மாநில அரசுகளுக்கு கல்வி நிதி என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
கல்வி நிலையங்களில் மதக்கருத்துகளைத் திணிக்க முயற்சி செய்யும் ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்த பிற்போக்குவாதிகளை துணைவேந்தராக நியமிக்கும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஜெ.பாரதசெல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஜெ.பி. வீரபாண்டியன் முன்னிலை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன், தலைவா் சு. பாலசுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கினா்.
இளைஞா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் கே.சரவணன், மாணவா் பெருமன்ற மாவட்டப் பொருளாளா் க.கோபி, மாவட்ட துணைச் செயலாளா் சே.அருண், திருவிக கல்லூரி ஒருங்கிணைப்பாளா் எஸ் பிரேம், இளம் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் ஆா். சுபிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.