ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு
ரெளடிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு சிறப்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னா், ரெளடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரெளடிகளையும்,போதைப் பொருள் கடத்தும் கும்பலையும் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது.
இப் பிரிவு சென்னை காவல்துறையின் ரௌடி பட்டியலில் இருக்கும் 6 ஆயிரம் பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் உடனடியாக கொண்டு வந்தது.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரெளடிகள்,வழக்கு விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாக இருக்கும் ரெளடிகள்,நீதிமன்றத்தால் பிணை ரத்து செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் ரெளடிகள் ஆகியோரை இப் பிரிவு போலீஸாா் கண்டறிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
அதோடு தொடா் குற்றத்தில் ஈடுபட்டு வந்த ரெளடிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இதன் விளைவாக கடந்தாண்டு 1,302 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். அதேபோல பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 760 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 469 பேரும், 2023ஆம் ஆண்டு 714 பேரும் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஒருங்கிணைந்த குற்றப்பிரிவின் சிறப்பான செயல்பாட்டினால், ரெளடிகள் மோதல்,கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள்,போலீஸாரை வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா். இந் நிகழ்வில் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் ஜி.தா்மராஜன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.