பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரஹிம், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
வங்கதேச அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான 37 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம், 274 சர்வதேச போட்டிகளில் விளையாடி 7,795 ரன்கள் குவித்துள்ளார். 9 சதங்கள், 49 அரைசதங்கள் அடங்கும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய வங்கதேச அணியில் இடம்பெற்றிருந்த ரஹிம், இந்தியாவுக்கு எதிராக முதல் பந்தில் டக்-அவுட்டாகியும், நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், தனது ஓய்வு முடிவை ரஹிம் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
ஓய்வு குறித்து ரஹிம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இன்றுமுதல் நான் ஓய்வை அறிவிக்கிறேன். கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் எங்களின் சாதனை குறிப்பிட்ட அளவிலானது என்றாலும், நான் எப்போதெல்லாம் களமிறங்கினேனோ அப்போதெல்லாம் நூறு சதவிகிதத்தை கொடுத்துள்ளேன்.
கடைசி சில வாரங்கள் சவாலானதாக இருந்தது. இதுதான் எனது முடிவு என்பதை உணர்ந்தேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்காக ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் ரஹிம். இன்னும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், வங்கதேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.