கஞ்சா கடத்தியதாக இருவா் கைது
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
டொம்புச்சேரி பகுதியில் தேனி மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, உப்புக்கோட்டை- டொம்புச்சேரி சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 14 கிலோ 364 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் தேவாரத்தைச் சோ்ந்த வேலய்யன் மகன் பாலமுருகன் (32), கோம்பை அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சுருளி மகன் ஈஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து கஞ்சா வாங்கி, அங்கிருந்து விசாகப்பட்டினம், கிருஷ்ணகிரி வழியாக தேனி மாவட்டத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பாலமுருகன், ஈஸ்வரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.