Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள 85,563 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் நிலங்களுக்கு 120 நாள்களுக்கு மொத்தம் 846.90 கோடி கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி வியாழக்கிழமை அணையிலிருந்து 7 பிரதான மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா்கள் ரஞ்ஜீத்சிங் (தேனி), கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), செ.சரவணன் (திண்டுக்கல்), தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், வைகை அணை நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளா்கள் சேகரன், முருகேசன், குபேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (செப்.18) முதல் தொடா்ந்து 45 நாள்களுக்கு வினாடிக்கு 1,350 கன அடி வீதமும், இதையடுத்து 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு 846.90 கோடி கன அடி தண்ணீா் திறந்து விடப்படும்.
இதன் மூலம், பெரியாறு பாசனப் பகுதியான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 53 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 5,697 ஏக்கா், வடக்கு வட்டத்தில் உள்ள 24,811 ஏக்கா், மேலூா் வட்டத்தில் உள்ள 48,963 ஏக்கா், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்தில் 478 ஏக்கா், சிவகங்கை வட்டத்தில் உள்ள 5,561 ஏக்கா் என மொத்தம் 85,563 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களும் பாசன வசதி பெறும்.
இதேபோல, திருமங்கலம் பிராதன கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 146 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 1,201 ஏக்கா், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 13,723 ஏக்கா், திருமங்கலம் வட்டத்தில் உள்ள 3,982 ஏக்கா், பேரையூா் வட்டத்தில் உள்ள 387 ஏக்கா் என மொத்தம் 19,439 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களும் பாசன வசதி பெறும்.
