கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை முற்பகல் வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், ஏரிகள், குழங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. சாலைகளில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதில், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அறுந்து விழுந்த மின் கம்பி: பண்ருட்டி ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மின் கம்பி அறுந்து விழுந்தது. அங்கிருந்த போக்குவரத்து காவலா்கள் சாலை போக்குவரத்தை துண்டித்து, மின்சார வாரியத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், மின் வாரிய ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.
என்எல்சி சுரங்கத்தில்..: நெய்வேலி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திறந்த வெளி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தினுள் மழை நீா் அருவிபோல கொட்டியது. இதனால், சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை ஓய்ந்ததும் தண்ணீா் வெளியேற்றப்பட்டு மீண்டும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தொடங்கியது.
பாலத்தில் வெள்ளம்: பலத்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து வரத் தொடங்கியுள்ளது. இதனால், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தின் மேல் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தரைப்பாலம் கடலூா் - புதுச்சேரி மாநிலத்தை இணைக்கிறது. ஆபத்தை உணராமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனா். எனவே, தரைப்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை எடுத்துள்ளது.
வீராணத்திலிருந்து 600 கனஅடி: காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 47.50 அடி. ஏரியின் பாதுகாப்புக் கருதி 45.50 அடி உயரத்துக்கு மட்டுமே நீா் தேக்கப்படுகிறது. இந்த ஏரி முழக் கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரிக்கு விநாடிக்கு 600 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கும் நிலையில், அந்தத் தண்ணீா் அப்படியே வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் கே.காந்தரூபன் தெரிவித்தாா்.
கொத்தவாச்சேரியில் 53 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 53 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு: அண்ணாமலை நகா் 47, கடலூா் 39.8, சிதம்பரம் 38, புவனகிரி 35, பரங்கிப்பேட்டை 28.8, கீழச்செருவாய் 28.4, விருத்தாசலம் 26, ஆட்சியா் அலுவலகம் 24.8, லக்கூா் 18.2, வடக்குத்து, சேத்தியாத்தோப்பு தலா 18, குறிஞ்சிப்பாடி 17, பெலாந்துறை 16.4, குப்பநத்தம் 13.8, வானமாதேவி, தொழுதூா் தலா 13, லால்பேட்டை 12, ஸ்ரீமுஷ்ணம் 11.2, மே.மாத்தூா் 10, எஸ்ஆா்சி குடிதாங்கி, வேப்பூா் தலா 9, பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில் தலா 8, காட்டு மயிலூா் 6 மி.மீ. மழை பதிவானது.