'கடல் நாட்டுக்கு சொந்தமானது' - எரிவாயு எடுக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்ப்பதால் காட்டமான பொன்னார்
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "விகிதாச்சார முறையில் நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதே சமயம் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முயன்றன. பீகார் தேர்தலுக்காக சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பீகார் தேர்தலுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்ததாக கூறினால் தமிழக தேர்தலுக்காக நடத்துவதாக அவர் கூறுவாரா?.
`மோடி தந்த அமிர்த கலசத்தை இழந்து விட்டோம்’
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழிஞ்ஞம் வர்த்தகத் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. கன்னியாகுமரியில் 28,000 கோடி ரூபாய் செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமுக காங்கிரஸ் மற்றும் மதவாதிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் சமுதாயம் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தந்த அமிர்த கலசத்தை நாம் இழந்து விட்டோம்.
மனோ தங்கராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் முன்பு செயல்பட்டது போல் இனிமேல் அவர் இருக்க வேண்டாம்" என்றார்.

கன்னியாகுமரி கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துபேசிய பொன்.ராதாகிருஷ்ணர், "கடல் எல்லோருக்கும் சொந்தம். நாட்டுக்குச் சொந்தமானது கடல். அது எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி அடம்பிடித்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த நாடு முக்கியம். நாளைக்கு முக்கியமான சில இடங்களில் கிராமங்களை காலிபண்ணிவிட்டு கடற்படைக்கு தேவைப்படுகிறது எனச்சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

சீனா வந்து அடித்தாலும் பரவாயில்லை, 48 மீனவ கிராமங்களும் அழிந்தாலும் பரவாயில்லை, நேவி வரக்கூடாது எனச்சொல்லுவீர்களா. ஒட்டுமொத்த கன்னியாகுமரியும் அழிந்தாலும் பரவாயில்லை என நீங்கள் சொல்லுவீர்களா. இங்கு நேவி வரக்கூடாது என நான் வேண்டுமானால் அவர்களுக்காகச் சொல்லலாம். ஏனென்றால் நான் தனி கட்டை. மீனவர்கள் கடல்கடந்து மற்ற இடங்களுக்கு எல்லாம் போகிறார்கள்தானே. அங்கு நடக்கும் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள். அந்த அரசாங்கங்கள் எப்படி நடந்துகொண்டிக்கிறார்கள். அதுபோல நாமும் நடக்க பழகணும்" என்றார்.