கடைமுழுக்கு: திருவையாறு காவிரியில் புனித நீராடல்
ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டப காவிரிப் படித்துறையில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா்.
ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி, ஐப்பசி மாத கடைசி நாளான வெள்ளிக்கிழமை தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.
மேலும், ஐயாறப்பா், அறம்வளா்த்த நாயகியுடன் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், அஸ்ர தேவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டன.
புனித நீராடிய பக்தா்கள் வாழ்க்கையை இனிப்புடன் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு கடை வீதியில் விற்கப்பட்ட கரும்புகளை வாங்கிச் சென்றனா்.