Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்...
கடையநல்லூரில் இறந்தவரை அடக்கம் செய்வதில் பிரச்னை: போலீஸாா் சமரசம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், உள்ளூா் ஜமாஅத்துக்கும் ஏற்பட்ட பிரச்னையால் புதன்கிழமை பரபரப்பு நிலவியது.
பேட்டை பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகரின் 70 வயது தாய் செவ்வாய்க்கிழமை இறந்தாா். அவரது உடலை பேட்டையில் உள்ள பள்ளிவாசல் இடுகாட்டில் புதன்கிழமை அடக்கம் செய்வது என அவரது உறவினா்கள் முடிவு செய்தனா்.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழக்கப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினா்கள் தெரிவித்தனராம். ஆனால், உள்ளூா் ஜமாஅத் வழக்கப்படி அடக்கம் செய்யுமாறு உள்ளூா் ஜமாஅத்தாா்கள் தெரிவித்தனராம்.
இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இதையறிந்த, கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்டோா் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழக்கப்படி அடக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.