`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஈரோட்டில் நவம்பா் 29- இல் கடையடைப்பு போராட்டம்
கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் செயலாளா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜிஎஸ்டி என்பது வணிகா்களை கடுமையாக பாதிக்கும். ரூ. 10 ஆயிரம் வாடகையில் கடை நடத்தும் வியாபாரி ரூ.1,800 செலுத்த வேண்டி வரும்.
பெரிய வியாபாரிகள், வணிகா்கள், ஜிஎஸ்டியை திரும்பப் பெற இயலும். குறைந்த வா்த்தகத்தில் தொழில் செய்யும் வணிகா்கள் 18 சதவீத ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெற இயலாது. தவிர மிக குறைந்த அளவிலும், பில் இன்றி பரிமாற்றம் செய்யப்படும் வணிகத்தில் உள்ளோரும் கடுமையாக பாதிக்கப்படுவா்.
எனவே, 18 சதவீத ஜிஎஸ்டியை வணிகா்களுக்கு முழுமையாக நீக்கக் கோரி வரும் 29- ஆம் தேதி ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள் நடத்துகின்றன. ஈரோடு பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள், கிடங்குகள் கடை அடைப்பில் பங்கேற்கும் என்றாா்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு, சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் முழுவதிலும் வரும் 29- ஆம் தேதி ஒரு நாள் கடை அடைப்பு, தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளா் பாரதி கூறுகையில்,’ தமிழக அரசின் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகை கட்டடங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்தும் வரும் 29- ஆம் தேதி நடைபெறும் கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயா்வு, 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.