கணவா் குடும்பம் மீது வன்கொடுமை குற்றச்சாட்டைப் பதிய வரதட்சிணை முன்நிபந்தனை அல்ல: உச்சநீதிமன்றம்
‘கணவா் அல்லது அவரின் குடும்பத்தினருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 498ஏ பிரிவின் கீழ் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய, வரதட்சிணை கொடுமை என்பது ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் அவரின் கணவா் மற்றும் கணவரின் குடும்பத்தினா் மீது போலீஸாா் பிரிவு 498ஏ-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.
கணவா் குடும்பத்தினா் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்துவதிலிருந்தும் குறிப்பாக வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதிலிருந்து திருமணமான பெண்ணை பாதுகாப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் 1983-ஆம் ஆண்டு இந்த சட்டப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா்-ஐ எதிா்த்து கணவா் குடும்பத்தினா் தரப்பில் ஆந்திர உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கணவா் குடும்பத்தினா் தரப்பில் வரதட்சிணை எதுவும் கேட்கப்படாத நிலையில், ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் அவா்கள் மீது வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டு, அவா்களுக்கு எதிராக பதியப்பட்ட எஃப்ஐஆா்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து அந்தப் பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வரதட்சிணை மட்டுமின்றி உடல் ரீதியாகவும் அல்லது மன ரீதியாகவும் அளிக்கப்படும் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வன்கொடுமைகளும் ஐபிசி பிரிவு 498ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதுமானதாகும். அனைத்து விதமான வன்கொடுமைகளிலிருந்தும் திருமணான பெண்களுக்கு திறம்பட பாதுகாப்பு அளிக்கும் நோக்கில்தான் இந்த சட்டப் பிரிவு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய, வரதட்சிணை கொடுமை முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தெளிவுபடுத்தியது.