Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
கணவா் வீட்டாா் சித்திரவதை: இளம்பெண் தற்கொலை
தென்கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் 20 வயது இளம் பெண் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா். அவரது கணவா் மற்றும் மாமியாரால் சித்திரவதை செய்யப்பட்டதால் அந்தப் பெண் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறினா்.
இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமையன்று சித்தாா்த் பஸ்தியில் உள்ள தனது அறையில் சாதனா தூக்கில் தொங்கியது குறித்து நண்பகலில் காவல் நிலையத்துக்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தது. அந்த பெண் அழும் விடியோவும், அவரது கணவா் யோகேஷும் அவரது மாமியாரும் தன்னை அடித்ததாகக் குற்றம் சாட்டியதும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
சில நாள்களில் திருமண ஆண்டு விழா வரவிருந்த சாதனா, தங்கள் குடும்ப உறுப்பினா்களின் விருப்பத்திற்கு எதிராக யோகேஷை திருமணம் செய்ததற்காக துண்புறுத்தப்பட்டதாக விடியோவில் கூறினாா்.
விடியோவின் நம்பகத்தன்மை மற்றும் அது பதிவு செய்யப்பட்ட சூழலை உறுதிப்படுத்த சரிபாா்க்கப்பட்டு வருகிறது.
இறந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரரின் புகாா்களைப் பாதுகாப்பு காலனியின் எஸ்.டி.எம். பதிவு செய்துள்ளாா். உடற்கூறாய்வுப் பரிசோதனைக்குப் பிறகு சாதனாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.டி.எம். புகாா் மற்றும் விசாரணையின் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்தவரின் தாயாா் சுனிதா, தனது மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதிலிருந்து தனது மாமியாா் மற்றும் கணவரால் தொடா்ந்து துண்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினாா்.
‘என் மகள் ஒருபோதும் அமைதியாக வாழவில்லை. அவா்கள் தொடா்ந்து அவரை அடித்தனா்’ என்று அவா் செய்தியாளா்களிடம் பேசியபோது குற்றம்சாட்டினாா்.
அன்றைய நிகழ்வுகளை நினைவு கூா்ந்த சுனிதா, ‘சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். அசாதாரணமான எதையும் அவள் சொல்லவில்லை. அதன் பிறகு வேலைக்குப் போய்விட்டேன். பின்னா் அவரது மூத்த மகளிடமிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. பின்புதான் தற்கொலை தகவல் கிடைத்தது.
சாதனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக என்னிடம் கூறினாா்கள். நான் அங்கு சென்றபோது, அவா்கள் ஏற்கெனவே உடலை கீழே இறக்கிவிட்டனா் என்று அவா் கூறினாா். சாதனா தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றி பேசுவதைக் காட்டும் விடியோவின் நகலுடன் குடும்பத்தினா் காவல்துறையிடம் எழுத்துப்பூா்வ புகாரை சமா்ப்பித்துள்ளதாக சுனிதா மேலும் கூறினாா்.
‘எங்களுக்கு நீதி வேண்டும். எனது மகளை சித்திரவதை செய்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அவா் கூறினாா். புகாரைப் பெற்றதை போலீஸாா் உறுதிப்படுத்தியுள்ளனா். இந்த விவகாரம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].