கந்து வட்டிக் கொடுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சேது மணிக்கம் (70). இவா் இந்திரா நகரை சோ்ந்த பாபா முருகனிடம் ரூ. 5 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகவும், ரூ.15 ஆயிரம் வரை வட்டி கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவா் மேலும் 10 ஆயிரம் வேண்டும் என கேட்டு கடந்த 10-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநா் சேது மாணிக்கத்தை 3 பேருடன் சோ்ந்து தாக்கிக் காயப்படுத்தினாா்.
இதுகுறித்து, சேதுமாணிக்கம் ராமேசுவரம் கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த சேதுமாணிக்கம், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே போலீஸாா் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, கந்து வட்டிக் கும்பல் மீது நடவடிக்கை கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.