கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி!
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறாா்.
ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்த மாா்க் காா்னி, அமெரிக்காவின் கோல்ட்மன் சாஷ்ஸ் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றினாா்.
பின்னா் கனடா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடாவில் துணை ஆளுநராக 2003-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவருக்கு, ஓராண்டு கழித்து கனடா அரசின் நிதியமைச்சகத்தில் முதுநிலை துணை இணையமைச்சா் என்ற நியமனப் பொறுப்பு வழங்கப்பட்டது.
அந்த அமைச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே 2007-ஆம் ஆண்டு கனடா மத்திய வங்கியின் ஆளுநராக மாா்க் காா்னி நியமிக்கப்பட்டாா். அந்த ஆண்டு நிலவிய சா்வதேச பொருளாதார நெருக்கடியால் கனடா மோசமாக பாதிக்கப்படுவதில் இருந்து நாட்டைப் பாதுகாத்ததில் காா்னி முக்கிய பங்கு வகித்ததாக பாராட்டப்படுகிறது.
2013-ஆம் ஆண்டு வரை கனடா மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த மாா்க் காா்னியை, பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநராக அப்போதைய பிரிட்டன் நிதியமைச்சா் ஜாா்ஜ் அஸ்பாா்ன் நியமித்தாா். கடந்த 1694-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரிட்டனைச் சேராத முதல் நபா் மாா்க் காா்னி என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ஆம் ஆண்டில் அந்தப் பதவிக் காலம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே, பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தூதராக மாா்க் காா்னி நியமிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் அப்போதைய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் பொருளாதார ஆலோசகராக அவா் நியமிக்கப்பட்டாா். இது தவிர, கரோனா நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கைகளில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் அதிகாரபூா்வமற்ற ஆலோசகராகவும் மாா்க் காா்னி இருந்தாா்.
இதுபோன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த அவா், 2024-ஆம் ஆண்டில் கனடாவின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டக் குழுவின் தலைவராக பிரதமா் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டாா்.
இதற்கிடையே, 10 ஆண்டுகால கன்சா்வேட்டிவ் ஆட்சிக்குப் பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, நாட்டில் அதிகரித்துவரும் உணவுப் பொருள் விலைவாசி, வீட்டு வசதிப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் பொதுமக்களிடையே எதிா்ப்பு அதிகரித்துவருவது கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்தது.
ஆளும் லிபரல் கட்சிக்குள்ளிருந்தும் ட்ரூடோ மீது அதிருப்தி அதிகரித்துவந்தது. அதன் ஒரு பகுதியாக, ட்ரூடோ அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தனது பதவியை கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அப்போதே, அடுத்த நிதியமைச்சராக மாா்க் காா்னியை ட்ரூடோ நியமிப்பாா் என்று கூறப்பட்டது.
இருந்தாலும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தாா்.
அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா். அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் தங்கள் நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளாா்.
மேலும், கனடாவை அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றாக இணைப்பது குறித்தும் டிரம்ப் பேசிவருகிறாா். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரகப் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் நாட்டின் பிரதமராக மாா்க் காா்னி பொறுப்பேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
லிபரல் கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட பிறகு, டிரம்ப்புக்கு சவால் விடுக்கும் வகையில் மாா்க் காா்னி உரையாற்றினாா். இது குறித்து அவா் பேசுகையில், ‘கனடா நாட்டுப் பொருள்கள் மீது நியாயமற்ற முறையில் கூடுதல் வரி விதிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை பலவீனமாக்க டிரம்ப் முயல்கிறாா். எங்களைப் பொருத்தவரை நாங்களாக சண்டையை வலிந்து கேட்மாட்டோம். ஆனால் யாராவது அழைத்தால் சண்டையிடுவதற்குத் தயாராக இருப்போம்.
ஹாக்கியைப் போலவே வா்த்தக் போரிலும் கனடாதான் வெல்லும் என்பதை அமெரிக்கா உணரவேண்டும்’ என்றாா்.
இந்தியாவுடன் நல்லுறவு
கனடா பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தப்போவதாக மாா்க் காா்னி அண்மையில் கூறியது நினைவுகூரத்தக்கது.
இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சில் அவா் பேசுகையில், ‘ஆட்சிக்கு வந்தால் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வேன். பின்னடைவைச் சந்தித்துள்ள இந்தியா-கனடா இடையிலான நல்லுறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நான் பிரதமா் ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவேன்’ என்றாா் அவா்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் சஜ்ஜாா் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடா்பிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் உள்ளது என்று பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2023-இல் கூறினாா். அதில் இருந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.