Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
உக்ரைனைப் பாதுகாக்க சா்வதேச ராணுவம்!
உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பெயா் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், அங்கு சா்வதேச பாதுகாப்புப் படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
இது குறித்து விவாதிப்பதற்காக 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனா். ஐரோப்பா மட்டுமின்றி ஆசியா, ஓசியானா (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அமைந்துள்ள பகுதி) ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த நாடுகளும் இதில் பங்கேற்கின்றன என்றாா் அவா்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத தளவாடங்களை அனுப்பிவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். மேலும், உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்துள்ளாா்.
இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சவூதி அரேபியா சென்றுள்ளாா்.
இந்தச் சூழலில், போா் நிறுத்தம் ஏற்பட்டதற்குப் பிறகு உக்ரைனை ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து சுமாா் 30 நாடுகள் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.