திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கனவு இல்லம் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.3,500 கோடி: தமிழக அரசு
‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தைச் செயல்படுத்த நிகழாண்டில் ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டுக்கு தலா ரூ.3 லட்சத்து 500 வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டின் கட்டுமானத்துக்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் வரை முதல் கட்டமாக அரசால் ரூ.300 கோடிஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயனாளிகள் பயனடையும் வகையில், குறைந்த விலையில் சிமென்ட் மூட்டைகள் டான்செம் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.48 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளின் கட்டுமானப் பணிகளும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதால், இந்த நிதியாண்டுக்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊரக வீடுகள் சீரமைத்தல்: அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுநாள்வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசால் ஏற்கெனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நிகழாண்டில், 2,482 கிராம ஊராட்சிகளில் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ன.
மேற்குறிப்பிட்டவாறு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பெறப்பட்ட ரூ.300 கோடியுடன் தற்போது ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊரக குடியிருப்பு பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பாா்க்கும் பணிகளுக்காக ஏற்கெனவே ரூ.150 கோடி அரசால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.450 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.347.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.