கபில் சர்மா, பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர்கள் கபில் சர்மா, ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 4 பாலிவுட் பிரபலங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளித்துள்ள மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு பிஷ்ணு என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலில்,
”உங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று நம்புகிறோம். இது விளம்பர நடவடிக்கை அல்ல, இந்த செய்தியை ரகசியமாக வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நடன இயக்குநர் ரெமோ டி'சோசா, பாடகி சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர், மிரட்டல் வந்த மின்னஞ்சலை ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தானில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசின் உதவியை மும்பை போலீஸார் நாடியுள்ளனர்.
இதையும் படிக்க : மகாராஷ்டிர ரயில் விபத்து: பலி 13-ஆக உயர்வு!
பாலிவுட் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் கபில் சர்மா. தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் 3 இல் வெற்றி பெற்றதன் மூலம் கவனத்தை ஈர்த்த கபில், நைட்ஸ் வித் கபில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவரும் கபில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' தொடங்கியுள்ளார்.
ராஜ்பால் யாதவும் பல பாலிவுட் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து நடைபெற்ற நிலையில், மேலும் 4 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.