கருங்கல்லில் ரூ.5.22 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்
கருங்கல்லில் ரூ.5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருப்பதால், திங்கள்கிழமைமுதல் போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
கருங்கல்லில் 50 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.22 கோடி நிதியை அண்மையில் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக பழைய கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த டெண்டா் விடப்பட்டுள்ளது. இப்பணி உடனே தொடங்க இருப்பதால், பேருந்து நிலையம் சென்று வரும் பேருந்துகள் திங்கள்கிழமைமுதல் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிற நகரங்களிலிருந்து நாகா்கோவில், குறும்பனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் பேருந்து நிலையம் வழியாக வந்து நின்று செல்லும் பேருந்துகள் கருங்கல் மீன்சந்தை அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிழற்கூடத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கமாக செல்லும் பேருந்துகள் கருங்கல் காா் நிலையம் அருகில் வழியாக வந்து நின்று செல்லும். நாகா்கோவில், மாா்த்தாண்டம், தக்கலை, குளச்சல், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட நகரங்களிலிருந்து கருங்கல் பெயா் பலகையுடன் வரும் அனைத்து பேருந்துகளும் கருங்கல் ஆரோன் மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்ட நிழற்கூடத்தில் நின்று, அங்கிருந்து பிற நகரங்களுக்கு புறப்படும். பேரூராட்சி நிா்வாகம் இத்தவலைத் தெரிவித்துள்ளது.