கரூர்: ``இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும் சீரழியுறோம்!” - சுடுகாடு கேட்டு போராடும் மக்கள்
"இருக்கும்போதுதான் எங்களுக்கு மதிப்பில்லை. இறந்த பிறகாவது எங்களுக்கு பிரச்னை இருக்காது என்று நினைத்தால், சுடுகாட்டுப் பிரச்னையில் சீரழியுறோம்” என்று கண்ணீர் வடிக்கிறார்கள் கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்காவுக்கு உள்பட்ட பள்ளாபாளயம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள்.
பள்ளாபாளயம் கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் வசிக்கின்றனர். சுடுகாடு தேடி ஒவ்வொருமுறையும் இறந்தவர்களின் உடலை சுமந்துகொண்டு கழுத்தளவு தண்ணீர், காடு, கரை, மேடு, பள்ளம் என்று அலைவதற்குள் தாவு தீர்ந்துபோவதாக கண்ணீர் வடிக்கிறார்கள்.
தாங்கள் படும் இந்த அல்லல் பற்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தர்கள். இதுபற்றி, பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சிலரிடம் பேசினோம்.
”பள்ளாபாளையம் பகுதியில் நான்கு தலைமுறையாக வசித்து வரும் எங்கள் 40 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால், எங்கள் குடும்பங்களில் இறப்பவர்களை வாய்க்கால் கரையில் அடக்கம் செய்து வருகிறோம். ஆனால், எங்கள் ஊரில் வசிக்கும் மற்ற சமூக மக்களுக்கு நல்ல முறையில் தனித்தனியே சுடுகாடுகள் உள்ளன.
குறிப்பாக, ஒரு சமூக மக்களுக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காலம்காலமாக கோரிக்கை வைத்து வரும் எங்களுக்கு முறையான சுடுகாட்டை அமைத்து தரவில்லை. இதன் காரணத்தால், எங்கள் ஊரில் உள்ள ராஜவாய்க்காலை கடந்து அந்தபுறம் உள்ள அதன் கரையில் எங்கள் குடும்பங்களில் இறப்பவர்களின் பிணங்களை எரித்து வருகிறோம்.
ஆனால், இங்குள்ள விவசாய நிலங்களில் இருபோகம் விவசாயம் நடைபெறும் காலங்களிலும், மழை காலங்களிலும், வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்லும் காலங்களிலும் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பிணங்களை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டியிருக்கிறது. எங்கள் வேதனைகளை பலமுறை அரசின் கவனத்திற்கும், மாவட்ட நிர்வாக கவனத்திற்கும் கொண்டு சென்றும் எங்கள் அல்லலை தீர்க்க யாரும் முன்வரவில்லை.
இத்தனைக்கும், எங்கள் ஊரில் நிறைய அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவற்றில் எங்களுக்கு சுடுகாடு அமைத்து தரத்தான் யாருக்கும் மனமில்லை. இதனால், இறந்த பிறகும் எங்கள் மக்கள் நிம்மதியில்லாமல் சீரழியுறோம். இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குப்பாயம்மாள் என்பவர் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்த நேரத்தில் அடக்கம் செய்வதற்காக ராஜவாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை சுமந்து சென்று அடக்கம் செய்தோம்.
இந்தமுறை அதிகம் தண்ணீர் வந்ததால் பிணத்தை தூக்கிச் சென்று தகனம் செய்ய அதிகமாக சிரமப்பட்டுவிட்டோம். காலம் காலமாக நாங்கள் அனுபவித்து வரும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டத்தான், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அம்பேத்கரைப் பற்றி அமித்ஷா தவறாக பேசிவிட்டார் என்பதற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தைய தக்க என்று குதிக்கிறாங்க. ஆனால், காலம் காலமாக சுடுகாடு இல்லாமல் இருக்கும் எங்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க ஒரு நாதியில்லை. இனியும் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை என்றால், அடுத்து விழும் பிணத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்துவோம்” என்றார்கள் கொதிப்பாக!.
இந்த மக்கள் படும் வேதனைப் பற்றி, மண்மங்கலம் தாசில்தாரான குணசேகரனிடம் கூறி விளக்கம் கேட்டோம்.
“எனக்கு இன்று வேறு பணி கொடுத்ததால், கரூர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்குச் செல்லவில்லை. இருந்தாலும், அந்தப் பகுதி மக்களின் இந்த பிரச்னை குறித்து அவர்கள் கொடுத்துள்ள மனுவை மாலையில் வாங்கி பார்த்துவிட்டு, இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும் என்று உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.