பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை
"நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" என்று செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுகடுத்துள்ளார்.
கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்தில், திமுக அரசைக் குற்றம்சாட்டியும், தவெக தலைவர் விஜய்யை ஆதரித்தும் பேசி, தவெக-வினரை ஆச்சரியப்படுத்தியவர் அண்ணாமலை.
இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், தவெக-வுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.
இந்தப் பரபரப்பான சூழலில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
விமானம் தரையிறங்குவதில் தாமதமான நிலையில் வெளியில் வந்தவரிடம், பாஜக-திமுக குறித்து சீமான் கூறியுள்ளது குறித்தும், கரூர் சம்பவ நீதிமன்ற வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது பரபரப்பாக இருந்த அண்ணாமலை, "இதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் கேளுங்கள். அவரைத் தவிர மற்ற அனைவரும் கரூர் சம்பவம் பற்றிப் பேசுகிறார்கள். நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா? எங்களிடம் கேள்வி கேட்கும் நீங்கள் அக்கட்சியினரிடம் கேட்க வேண்டும்.
தொடர்ந்து எங்களையே விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்? சொல்ல வேண்டிய கருத்துகளையெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். ஆகையால் சம்பந்தப்பட்ட கட்சி நபர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்புங்கள்" என்று கடுகடுத்த குரலில் பேசிவிட்டுச் சென்றார்.