மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்
கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சிக்குள்பட்ட குமாரபாளையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வது மற்றும் இலவச சட்ட ஆலோசனை உதவிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட முதன்மை நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் ஆகியோா் தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், தமிழகத்தின் பசுமை பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் வனத்துறை சாா்பில் 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்பட உள்ளது.
கரூா் மாவட்டத்தில் மண் பகுதிகள் குறைந்து பாறை பகுதிகள் அதிகமாக உள்ளதால் வெப்பம் அதிகமாக உள்ளது. அதிகளவில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலமே அதிகளவு ஆக்சிஜன் பெற்று வெப்பத்தை குறைக்க முடியும் என்றாா் அவா்.
தொடா்ந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் பேசுகையில், நீதிமன்றத்தை தேடி மக்கள் வந்த காலம் போய், நீதித்துறை மக்களை தேடி செல்லும் காலம் வந்துள்ளது. உயா்நீதி மன்ற உத்தரவின்படி அதிகளவில் மரக்கன்றுகள் நடவு செய்து, அதைத் தொடா்ந்து சட்டப் பணிகள் ஆணை குழுவினா் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தொடா்ந்து மரக்கன்றுகள் கரூா் மாவட்டம் முழுவதும் நடவு செய்வதற்கு மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து நீதித்துறை செயல்பட உள்ளது என்றாா் அவா்.
பின்னா் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருமளவில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நடுவா் என்.எஸ். ஜெயா பிரகாஷ் வரவேற்றாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலா் மற்றும் சாா்பு நீதிபதி பி. அனுராதா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட வன அலுவலா் எஸ்.சண்முகம், கரூா் அரசு கலைக்கல்லூரி முதல்வா் முனைவா் சுதா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆலோசகா் வழக்குரைஞா் சரண் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.