கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்
முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னைக்கு தனியாா் பள்ளிகள் இயக்குநா் எம்.பழனிசாமி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், கடலூா் மாவட்டத்துக்கு தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா உள்பட 33 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் தங்கள் ஆய்வுப் பணிகளை டிசம்பா், ஜனவரியில் முடித்து ஆய்வு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.