சீன செஸ் மோசடி: 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை, 38 பேருக்கு அபராதம்!
களைகட்டிய காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்
திருச்சி: காணும் பொங்கலையொட்டி திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் கூடி மகிழ்ந்தனா்.
திருச்சி- கரூா் நெடுஞ்சாலையிலுள்ள முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் குவிந்த மக்கள், காவிரி ஆற்றில் குளித்தும், பூங்காக்களில் விளையாடி களித்தும் காணும் பொங்கலைக் கொண்டாடினா். இங்குள்ள சிறுவா் பூங்கா, ஊஞ்சல் பகுதி, அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் வந்திருந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம், முக்கொம்புக்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.
ஸ்ரீரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்கா, சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கல்லணை உள்ளிட்ட இடங்களுக்கு காலை முதல் இரவு வரை மக்கள் வந்தனா். திருச்சி மாவட்டத்தின் முக்கியமான இடங்களுக்கு செல்ல சுற்றுலாக் கழகம், மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கின.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் சம்புகேசுவரா் கோயில், வயலூா் சுப்பிரமணியசுவாமி, சமயபுரம் மாரியம்மன் கோயில்களிலும் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கூடுதலாகத் திரண்டிருந்தனா். திரையரங்குகளிலும் கடந்த சில நாள்களைவிடவும் கூடுதலாக கூட்டம் நிரம்பி வழிந்ததும் குறிப்பிடத்தக்கது. காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் போலீஸாா் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
கம்பரசம்பேட்டையிலும் மக்கள் கூட்டம்: தற்போது மாநகர மக்களின் பொழுதுபோக்குமிடமாக மாறி வரும் கம்பரசம்பேட்டை தடுப்பணைப் பகுதியிலும் காலை முதலே திரளாக மக்கள் வந்தனா். சிறுவா்கள், இளைஞா்கள் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனா். கீதாபுரம் பகுதியிலும் காவிரியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். முன்னெச்சரிக்கையாக மாநகரக் காவல்துறையினா் மற்றும் மாவட்டக் காவல்துறையினா் அந்தந்தப் பகுதி ரோந்து குழுக்கள் மூலம் சுழற்சி முறையில் அனைத்து இடங்களையும் சுற்றி வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.