ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகி...
கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?
கழிப்பறையில் ஹேண்ட் டிரையர் எனும் கை உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கழிப்பறையில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சுத்தம் செய்வது அவசியம் என்று நிபுணர்கள் பலரும் வலியுறுத்துகிறார்கள். அதன்படியே நாமும் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளைச் சோப்பு கொண்டு கழுவுகிறோம்.
இதற்கு அடுத்தபடியாக ஈரமான கைகளை உலர்த்துவதற்கு 'ஹேண்ட் டிரையர்' எனும் கை உலர்த்திகளைப் பயன்படுத்துகிறோம். அலுவலகங்கள் மட்டுமின்றி ஹோட்டல்கள், பொது இடங்களிலும் அதிகமாக இதை வைத்திருக்கிறார்கள். மக்களும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், கழிப்பறைக்குச் சென்று வந்து கைகளை கழுவிய பிறகு ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்துவது தவறு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனில் கழிப்பறையை நிறைய பேர் பயன்படுத்தும்போது சிலர் கழிப்பறை இருக்கையை மூடாமல் வந்துவிடுவார்கள். இதனால் கழிவறை இருக்கையில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த அறை முழுவதும் படர்ந்திருக்கும்.

இப்போது நாம் பயன்படுத்திவிட்டு கைகளை கழுவிய பிறகு கைகள் சுத்தமாகி விடும். நன்றாக சுத்தமான கைகளை ஹேண்ட் டிரையரில் வைக்கும்போது அது அறையில் உள்ள பாக்டீரியாக்களை காற்றின் மூலமாக உங்கள் கைகளுக்கு மீண்டும் வரவைக்கும். இதனால் கைகள் மீண்டும் அசுத்தமடையும். இது மோசமான பாக்டீரியாக்கள் என்பதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது கைகளை கழுவதற்கு முன்பு உள்ளதைவிட இது ஆபத்தாகும்.
அதிவேக காற்றைக் கொண்ட கை உலர்த்திகள், நுண்ணுயிரி பாக்டீரியாக்களை ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பரப்பி மாசுபடுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
கை உலர்த்திகளுடன் கூடிய கழிப்பறைகளில் 254 பாக்டீரியா குழு இருப்பதாகவும் கை உலர்த்திகள் இல்லாத கழிப்பறைகளில் ஒரே ஒரு பாக்டீரியா குழு இருப்பதாகவும் அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஹேண்ட் டிரையரில் இருந்து வரும் காற்றின் மூலமாக கழிப்பறையில் இருந்து நச்சுகள் அதனுள் செல்கிறது, பின்னர் அதிலிருந்து கைகளுக்குப் பரவுகிறது.
அதனால் கழிப்பறையில் கைகளைக் கழுவிய பிறகு அவற்றை உலர்த்த (டிஷ்யூ) பேப்பரை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வீடுகளில் சுத்தமான துண்டுகளை பயன்படுத்தலாம்.
பேப்பர் கொண்டு சுத்தப்படுத்தும்போது ஈரம் விரைவாக உலர்வதுடன் கைகளில் மேலும் பாக்டீரியாக்கள் இருந்தால் அவை அகற்றப்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை பயன்படுத்தியவுடன் பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள். பேப்பரைக் கொண்டே கழிவறை இருக்கையை மூடுவது, தண்ணீர் குழாயை மூடுவது, கழிவறை கதவை மூடுவது போன்றவற்றைச் செய்வதன் மூலம் பாக்டீரியாவிலிருந்து இன்னும் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
சிலர் கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்னர் கைகளைக் கழுவுகிறார்கள். அதுவும் நல்லதுதான். ஆனால் கழிப்பறைக்குச் சென்றுவந்த பின்னர் கைகளைக் கழுவுவது கட்டாயம் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.