AUSvIND: `கோலியை பெர்த்தில் சதம் அடிக்க விட்டிருக்கக்கூடாது!'- ஆஸியை விமர்சிக்கு...
கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நொய்யலில் கண்காணிப்புக் கருவி பொருத்துவது கண்துடைப்பு
நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க கண்காணிப்புக் கருவிகளை பொருத்தி உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்று நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் திருஞானசம்பந்தம் வியாழக்கிழமை கூறியதாவது:
கோவை மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடங்கும் நொய்யல் நதி, சாய ஆலைகள், தொழிற்சாலைக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீா் ஆகியவை கலந்து கடுமையாக மாசடைந்து வருகிறது. இது குறித்து நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் முதல்வா் தனிப் பிரிவுக்கு புகாா் அளித்தோம்.
இதைத் தொடா்ந்து நொய்யலின் தன்மை குறித்து ஆராய்வதற்காக மங்கலம், திருப்பூா், காசிபாளையம், ஒரத்துப்பாளையம் அணை பகுதிகளில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் பதில் அளித்துள்ளது.
இதேபோல, நொய்யலில் கழிவுநீா் கலக்காத வகையில் ஆற்றுப்படுகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி நகராட்சி நிா்வாகம் பதில் அளித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் பல்வேறு கழிவுகள் கலக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாா்த்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கண்காணிப்பு கருவி பொருத்தியதும், கழிவுகள் கலப்பதை தடுத்து விடுவாா்களா? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல கண்துடைப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கருவிகளை பொருத்துகிறோம் என பதிலளித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, இது நாடகம். கண்காணிப்பு கருவி பொருத்தி கழிவுகள் கலப்பதை வேடிக்கைதான் பாா்க்க போகிறாா்கள் என்றாா்.