குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
கழுகார் : `வாரிசு அம்மணியின் வருகை; ரசிக்காத உ.பி-கள் டு சூரியக் கட்சியைக் கரைக்கும் மூவர்!’
மாங்கனி மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்காகவே, அங்கிருக்கும் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதியான ‘ராஜ’ பிரமுகருக்கு, மாண்புமிகு அந்தஸ்தை வழங்கியது ஆட்சி மேலிடம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு, கட்சிக்காரர்களைக் கண்டாலே எரிந்து விழுகிறாராம் ‘ராஜ’ பிரமுகர். இதனால் கடுப்பாகியிருக்கும் உடன்பிறப்புகள், அவருக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அதேபோல, கிழக்கில் அதிகாரம் செலுத்தும் ‘சிவ’ புள்ளி, ‘ராஜ’ பிரமுகரின் புகைப்படத்தைக்கூடக் கட்சி போஸ்டர்கள், பேனர்களில் போடவிடாமல் உள்ளடி அரசியலில் இறங்கியிருக்கிறாராம். இவர்களுக்கு இடையில், ‘எனக்கென்ன வந்துச்சு...’ என எந்தக் கவலையும் இல்லாமல் டெல்லியிலேயே இருக்கிறாராம் மேற்கிலுள்ள மீசைக்கார சீனியர். ‘இவர்கள் மூவரும் ஆளுக்கொரு திசையில், தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுவதால், கட்சி மெல்ல மெல்லக் கரைந்துவருகிறது’ என ஆதங்கப்படுகிறார்கள் உடன்பிறப்புகள். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலைக் கட்சியை வளர்க்கத் திட்டமிடும் எடக்கானவர், உள்ளடியில் முறுக்கிக்கொண்டு நிற்கும் மூவருக்குமிடையே புகைச்சலை இன்னும் அதிகப்படுத்த, ஆட்களையும் பசையையும் இறக்கியிருப்பதுதான் மாங்கனி மாவட்டத்தின் ‘ஹாட் டாபிக்!’
ஆறடி நடிகரின் வாரிசு அம்மணி, சமீபத்தில் சூரியக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவரை முதன்மையாவரிடம் அழைத்துச் சென்று கட்சிக்குள் இணைத்தது வடசென்னைப் புள்ளிதான். அதுதான் இப்போது பஞ்சாயத்தாகியிருக்கிறது. ‘அம்மணியின் வசிப்பிடம் சென்னை மேற்கு மாவட்ட எல்லைக்குள் வருகிறது. அதன்படி பார்த்தால், அம்மணியைக் கட்சிக்குள் இணைப்பதற்கு முன்பாக, மேற்கு மாவட்ட சீனியர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அந்த அம்மணிக்கு, மாவட்ட அளவில் போஸ்ட்டிங் போடுவதாக இருந்தாலும், மாநில அளவில் பதவி கிடைத்தாலும், லோக்கல் நிர்வாகிகளின் சப்போர்ட் அவருக்கு அவசியம். ஆனால், அவர் கட்சியில் இணைவதைக்கூட மேற்கு மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தவில்லை. போதாக்குறைக்கு, வடசென்னைப் புள்ளி மூலமாக அவர் கட்சிக்குள் வந்ததை, மேற்கு மாவட்ட உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை’ என்கிறது அறிவாலய வட்டாரம். ‘கட்சிக்குள் வரும்போதே பஞ்சாயத்தோடு வந்திருக்கிறார் அம்மணி... இனி, ரணகளத்துக்குப் பஞ்சமிருக்காது...’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!
இலைக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பெரிய அளவில் சம்பாதித்த நிறுவனத்தார்களில் சிலர், தற்போது ஆளும் தரப்போடும் நெருக்கத்தில் இருக்கிறார்கள். அப்படி, இந்த ஆட்சியிலும் செழிப்பாக இருக்கும் நிறுவனத்தார்களின் பட்டியலை எடுத்திருக்கிறதாம் இலைக் கட்சித் தலைமை. ‘அவர்களிடமிருந்து தேர்தல் நிதியைப் பெறத்தான் பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள். அவ்வாறு எடுக்கப்பட்ட முதற்கட்டப் பட்டியலிலுள்ள நிறுவனத்தார்களிடம், ‘2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் 100 ஸ்வீட் பாக்ஸுகளைக் கொடுங்கள். இல்லையென்றால், உங்கள் மீதுள்ள ஊழல் புகார்களைக் கிளப்பிவிட்டுச் சிக்கலை ஏற்படுத்துவோம்’ என்று மிரட்டும் தொனியில் ‘டீல்’ பேசுகிறார்களாம் இலைக் கட்சிப் புள்ளிகள் சிலர். இதில் மிரண்டுபோன சில நிறுவனங்கள், அவர்கள் கேட்ட ஸ்வீட் பாக்ஸுகளைக் கொடுக்கச் சம்மதமும் தெரிவித்திருக்கின்றனவாம். ‘எதிர்வரிசையில் இருக்கும் இந்த நேரத்தில், ஊழலை வெளியிட்டு அரசியல் லாபம் அடைவதை விட்டுவிட்டு, பாக்கெட்டை நிரப்ப நினைப்பது சரியா?’ எனக் கடுகடுக்கிறார்களாம் சீனியர்கள்!
ஒருநாளும் இல்லாத திருநாளாக, இந்தப் பொங்கலுக்கு அறிவாலயத்திலிருந்து அனைத்து மாவட்டக் கழகங்களுக்கும் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கொடுத்தனுப்பப்பட்ட அந்த இனிப்புகள், கீழ்மட்ட நிர்வாகிகளுக்குச் சரியாகச் சென்றடையவில்லையாம். பல மாவட்டங்களில் ஒன்றிய அளவிலேயே இனிப்புகள் நின்றுபோய்விட்டனவாம்.
குறிப்பாக ஒரு தென்மாவட்டம் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருக்கும் எட்டு மாவட்டப் புள்ளிகளே, தங்களுக்கு வந்த இனிப்புகளையும் ஏப்பம் விட்டுவிட்டதாகச் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. இது தொடர்பாக அறிவாலயத்துக்குப் புகார்கள் பறக்க, அந்த எட்டு மாவட்ட மா.செ-க்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறதாம். இது ஒருபுறம் இருக்க, சார்பு அணிகளின் நிர்வாகிகளை, அணித் தலைமைகள் இந்தப் பொங்கலுக்கு டீலில் விட்டுவிட்டதால், ஏக வருத்ததில் இருக்கிறார்களாம் அவர்கள்!
2023-ல் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களைக் கவர்வதற்காக, ஒவ்வொரு அமைச்சருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை நடக்கும் இடைத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியே போட்டியிலிருந்து விலகியதால், கொங்கு ஏரியாக்களிலுள்ள ஐந்து மாண்புமிகுக்களை மட்டும் களத்தில் இறக்கியிருக்கிறது ஆட்சி மேலிடம். அந்த ஐந்து பேரில், இரண்டு பேர் மட்டும் சூடாகக் களத்தில் இருக்கிறார்களாம். ‘யார் அதிக வாக்குகளைப் பெற்றுக்காட்டுவது...’ என அவர்களுக்குள் எழுந்திருக்கும் ‘ஈகோ’ மோதலால், மற்ற மூவரும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டார்களாம். இதையறிந்த ஆட்சி மேலிடம், ‘அந்த மாண்புமிகுக்களுக்கு இணையாக நீங்களும் களத்தில் இறங்கிப் போட்டி போடுங்கள். உங்களின் வேகத்தைவைத்துத்தான் சில முடிவுகள் எடுக்கப்படும்’ என்று பீதியைக் கிளப்பியிருப்பதால், அரண்டுபோயிருக்கிறார்கள் அந்த மூன்று மாண்புமிகுக்களும்!