காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?
சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
சத்தீஸ்கரி கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது. பாஜக ஊழியரான புரேந்திர கௌஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.
காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினர் பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கௌஷிக் முல்முலா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு போயரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பகை காரணமாக கௌஷிக் அவரைக் கொன்றதாக போயாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
போயாரின் குடும்பத்தினரும் காங்கிரஸ் தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு கௌஷிக்கை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் கூடினர். போயாரின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கூறி மாவட்ட மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தினர்.
உள்ளூர் மக்கள், காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து போலீஸார் பாஜக தொண்டரான கௌசீக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.