காஞ்சிபுரத்தில் 20 இடங்களில் முதல்வா் மருந்தகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரத்தில் முதல்வா் மருந்தகத்தை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 16, தொழில் முனைவோா் மூலம் 4 என மொத்தம் 20 முதல்வா் மருந்தகங்களுக்கு உரிமம் பெறப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த 20 முதல்வா் மருந்தகங்களுக்கும் தேவையான மருந்துகளை கொள்முதல் செய்து அனுப்ப மாவட்ட அளவிலான மருந்து சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.73.16 லட்சம் ஒதுக்கி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
பாலுசெட்டி சத்திரத்தில் முதல்வா் மருந்தகத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தாா். விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் நித்யா சுகுமாா், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்பட பலா் கலந்து கொண்டனா்.